இந்திய கோர்ட்டுகளில் ஆண்களுக்கு நிகராக மாஸ் காட்டும் பெண்கள்! 116 பெண் நீதிபதிகள்...! 4 முழுநேர பெண் தலைமை நீதிபதிகள்...!
Women showing mass much men Indian courts 116 female judges 4 full time female Chief Justices
இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாடு முழுவதும் உள்ள 4 உயர்நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்க சாதனையாக உருவெடுத்துள்ளது.இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தற்போது மொத்தம் 781 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 116 பேர் பெண் நீதிபதிகள் ஆவர். இது மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையில் சுமார் 14.85 சதவீதமாகும்.இந்த சூழலில், நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக பீகார் மாநிலத்தின் பாட்னா, குஜராத், மேகாலயா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றங்களில் 4 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சிக்கிம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த மீனாட்சி மதன்ராய், கடந்த 5-ந்தேதி பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து இந்த புதிய சாதனை உருவாகியுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் 4 உயர்நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் பெண் தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ள அபூர்வமான நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பாட்னா உயர்நீதிமன்றத்தில் மீனாட்சி மதன்ராய், குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுனிதா அகர்வால், மேகாலயா உயர்நீதிமன்றத்தில் ரேவதி மொஹிதே தேரே மற்றும் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் லிசா கில் ஆகியோர் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்ற சுனிதா அகர்வால், 2023 ஜூலை 23 முதல் அந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.அதேபோல், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரேவதி மொஹிதே தேரே, கடந்த ஜனவரி 10-ந்தேதி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்ற லிசா கில், கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 பெண்கள் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பில் இருப்பது இதற்கு முன் 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தாலும், அப்போது அனைவரும் முழுநேர தலைமை நீதிபதிகளாக இல்லை.அந்த ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திரா பானர்ஜி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மஞ்சுளா செல்லூர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரோகிணி ஆகியோர் தலைமை நீதிபதிகளாக பணியாற்றினர்.
அதே நேரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிஷிதா நிர்மல் மத்ரே பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.ஆனால் தற்போது பணியாற்றி வரும் 4 பேரும் முழுநேர தலைமை நீதிபதிகளாக இருப்பதால், இந்திய நீதித்துறை வரலாற்றில் இது புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.
இதுவரை இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 21 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர். பானுமதி, 2013-ஆம் ஆண்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Women showing mass much men Indian courts 116 female judges 4 full time female Chief Justices