அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல்...! மம்தா பானர்ஜியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி...!
Attack Abhishek Banerjee Rahul Gandhi spoke to Mamata Banerjee over phone
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இது ஒரு தனிநபர் மீதான தாக்குதலாக மட்டுமே பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல், அவருக்கு வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும், நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீதும் நடத்தப்படும் அத்துமீறலாக கருதப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் எந்த சூழலிலும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது என்றும், பழிவாங்கும் அரசியலின் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் உடனடி கவனம் செலுத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசுகளின் கடமை என்றும், அபிஷேக் பானர்ஜி விரைவில் முழு நலம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், அபிஷேக் பானர்ஜிக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பா.ஜ.க. தரப்பில் அழுத்தம் செலுத்தப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இந்த சூழலில், ராகுல் காந்தி நேரடியாக மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ராகுல் காந்தி தன்னை தொடர்புகொண்டு, "ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தெரிவியுங்கள்.
அபிஷேக் பானர்ஜிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்காக ஐதராபாத் அல்லது தேவையான வேறு எந்த இடத்திற்கும் மாற்றி சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அரசியல் எல்லைகளைத் தாண்டி மனிதநேய அடிப்படையில் ராகுல் காந்தி எடுத்த இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Attack Abhishek Banerjee Rahul Gandhi spoke to Mamata Banerjee over phone