விஜய்யின் எஸ்ஐஆர் போராட்டம் 'கண்துடைப்பு', ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் – சபாநாயகர் அப்பாவு விமர்சனம்!
appavu tvk vijay dmk
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு, நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்குச் சபாநாயகர் அப்பாவு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிரான போராட்டத்தை விமர்சித்தார்.
சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
"வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால், டெல்லியில் உள்ள மத்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசுக்கு எதிராகப் போராடியது வெறும் கண்துடைப்பே."
விஜய், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுகிறார் என்றும், இப்படிப் போராடுபவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். எஸ்ஐஆருக்கு எதிராகப் போராட்டம் என்று அறிவித்துவிட்டு, விஜய் எஸ்ஐஆருக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, மாறாக தமிழக அரசுக்கு எதிராகவே பேசியுள்ளார் என்றும் அப்பாவு குற்றம் சாட்டினார்.
"எஸ்ஐஆரைப் பார்த்து முதலமைச்சருக்கு எந்தப் பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 விண்ணப்பங்களைப் பெற தேர்தல் ஆணையமே அனுமதித்துள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார், எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள்" என்றும் அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததாலேயே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்றும், மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியைக் கொடுத்து வருவதாகவும் அப்பாவு தெரிவித்தார்.