நவம்பர் 20-ஆம் தேதி பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்கும் நிதிஷ்குமார்..!
Nitish Kumar to take oath as Bihar Chief Minister again on November 20th
நாளை மறுநாள் நவம்பர் 20-ஆம் தேதி பீஹாரின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றியை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், நவம்பர் 20-ஆம் தேதி 10-வது முறையாக பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கவுள்ளார். குறித்த விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளனர். நிதிஷ் குமாரின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

தற்போது பீஹார் அரசியல் களத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் பின்வருமாறு:
பாஜ சட்டசபை குழுத் தலைவரை தேர்ந்தெடுக்க, உ.பி.துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை கட்சி மேலிடம் பார்வையாளராக நியமித்துள்ளது.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் துணை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக பாட்னாவில் உள்ள காந்தி மைதானம் ஜரூராக தயாராகி வருகிறது.
முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு முன்பே, நவ.18ம் தேதி கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக நிதிஷ்குமார் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
ஆறு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் புதிய அமைச்சரவை இருக்கும். இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் சமமான வாய்ப்பு கிடைக்கும் என பாஜ எண்ணுகிறது.
சபாநாயகர் பதவி இம்முறை பாஜவுக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
English Summary
Nitish Kumar to take oath as Bihar Chief Minister again on November 20th