நீட் எதிர்ப்பு போராட்டம்: தமிழகத்தில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – விஜய் ஆட்சிக்கு தரும் சப்போர்ட்டை வாபஸ் வாங்க சிபிஎம் திட்டம்?
Anti NEET Protest Opposition to police action in Tamil Nadu Is the CPM planning to withdraw support for the Vijay led government
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிபிஐ மாநிலச் செயலாளர் சண்முகத்தை முதல்வர் விஜயை நேரில் சந்தித்து எதிர்ப்பை பதிவு செய்ய வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிபிஐ மாநிலச் செயலாளர் சண்முகம் அறிக்கைகள் வெளியிடுவதோடு மட்டுமே நிற்கிறார் என்ற அதிருப்தி கட்சியின் சில நிர்வாகிகள் மற்றும் மாணவர் அமைப்பினரிடையே எழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சியின் மாநில நிர்வாகிகளும் மாணவர் பிரதிநிதிகளும் சண்முகத்தை சந்தித்து, தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களை காவல்துறை ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நீட் தேர்வை எதிர்ப்பதாக அரசு அறிவித்திருந்தாலும், அதற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை காவல்துறை கட்டுப்படுத்துவது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. போராட்டங்களில் பெண்கள் மீது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் குறித்தும் கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பில், முதல்வரிடம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், தேவையெனில் அரசுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்ததாகக் கூறப்படும் சண்முகம், முதல்வர் விஜயை சந்திக்க ஏற்கனவே நேரம் கேட்டு தகவல் அனுப்பியுள்ளதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. நேரம் கிடைத்தவுடன் முதல்வரை நேரில் சந்தித்து கட்சியின் உணர்வுகளையும், போராட்டம் தொடர்பான கவலைகளையும் எடுத்துரைப்பேன் என்று அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
English Summary
Anti NEET Protest Opposition to police action in Tamil Nadu Is the CPM planning to withdraw support for the Vijay led government