அன்று பிரியாவின் கதி.. இன்று ஒன்றரை வயது குழந்தைக்கு.!! சந்தேகத்தை தூண்டும் அண்ணாமலை.!!
Annamalai doubts about govt hospitals treatments
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் என்பவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தை முகமது மகிரினுக்கு தற்போது 1½ வயது ஆகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக குழந்தையின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, வலது கை முட்டு வரை பாதிக்கப்பட்டு, வலது கையை வெட்டி அகற்றியிருக்கின்றனர். குழந்தைக்குக் கொடுத்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இது போன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது.
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai doubts about govt hospitals treatments