'உதயநிதிக்கு துறை அறிவு கிடையாது: தமிழகத்தில் மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் தான் அரசியல் செய்கிறார்'; அண்ணாமலை குற்றச்சாட்டு..!
Annamalai alleges that the Chief Minister is playing politics over the metro issue in Tamil Nadu
தமிழகம் வந்த பிரதமரை சந்திக்காமல், டில்லி செல்வேன் என்று முதல்வர் அரசியல் செய்வது எப்படி சரியாகும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளதாக கூறியுள்ளமை குறித்து அண்ணாமலையிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து கூறியதாவது;
பிரதமர் ராமநாதபுரம், ராமேஸ்வரம் வந்த அன்று முதல்வர் ஸ்டாலின் ஊட்டிக்கு போய்விட்டார். அதன் பின்னர் பிரதமர் கோவை வந்தபோதும் முதல்வர் வரவில்லை. மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட முதல்வர் வருகின்றார். அவர்கள் தரப்பு கோரிக்கைகளை வேண்டுகோளை வைக்கின்றனர்.
அத்துடன், பிரதமர் தூத்துக்குடிக்கு வந்தபோதும், முதல்வர் வரவில்லை. வேறு வேறு காரணங்களை சொன்னார். மேலும், கோவையிலும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வரவேண்டாம் என்ற எண்ணம் தான் முதல்வருக்கு இருக்கிறது. அந்த திட்டம் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த திட்ட அறிக்கையை சரியான முறையில் தயாரித்து கொடுத்திருப்பார்கள், முதல்வர் ஸ்டாலின் அதை மேற்பார்வை பார்த்திருப்பார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், திட்ட அறிக்கை சரியானதுதான் என்றால் இவர் பிரதமரை சந்தித்து முறையிட்டு இருப்பார். ஆனால், ஒரு இடத்திலும் கவனம் கொடுக்காத முதல்வர், இன்று அரசியலுக்காக நான் டில்லி செல்வேன், பிரதமரை பார்ப்பேன் என்கிறார். ஏன் பிரதமர் தமிழகம் வரும் போதே பார்க்கவில்லை. டில்லி போய் பார்த்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அரசு நிராகரித்து கொடுக்கவே மாட்டோம் என்று சொல்லவில்லை என்றும், நீங்கள் கொடுத்திருக்கக்கூடிய விரிவான திட்ட அறிக்கை தவறுலதாக உள்ளது என்றும். அது வரைமுறைக்கு உட்பட்டதாக இல்லை. ஆகையால் அதை சரி செய்யுங்கள், இந்த திட்ட அறிக்கைக்கு தான் ஒப்புதல் தர முடியாது என்று சொல்லி உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில அரசு மறுபடியும் கலந்தாலோசித்து விட்டு, தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் ஆலோசித்துவிட்டு, மத்திய அரசிடம் மீண்டும் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இவர்கள் தான் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள், நாங்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு நிதி பகிர்வு சரியாக தருவதில்லை என்று கனிமொழி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்றும், 32 சதவீதம் என்பது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அத்துடன், டிஜிபி நியமன விவகாரத்தில் முதல்வர் பொய் சொல்கிறார், தமிழக அரசும் பொய் சொல்கிறது. அமைச்சர் ரகுபதிக்கு இந்த நடைமுறையே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், சீனியாரிட்டி அடிப்படையில் ஒரு மாநில அரசு 05 தகுதியான அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டு அனுப்பும், அதில் யுபிஎஸ்சி 03 பேரை பரிந்துரை செய்து அனுப்பும். இதுதான் இந்தியா முழுதும் இருக்கும் நடைமுறை என்றும் தெவித்துள்ளார்.
முதல்வர் அவருக்கு வேண்டிய ஒரு அதிகாரிக்காக, சீனியாரிட்டியில் உள்ள ஒருவரை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார் என்றும், டிஜிபியே இல்லாமல் பொறுப்பு டிஜிபி போட்டால் இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்யும்..? என்றும் அதனால் தான் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உதயநிதி என்ன சாதனை செய்தார்..? ஒன்றும் கிடையாது. இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது எத்தனை மனுக்கள் வாங்கினார்..? எத்தனை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது, ஒன்றும் கிடையாது. அதை பற்றி எதுவுமே பேசாமல், சமஸ்கிருதம் செத்த மொழி, டெங்கு, கொசு, மலேரியா. தமிழகம், வடக்கு என்று இப்படித்தான் பேசுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

குடும்ப ஆட்சியில் ஒருவரை அதாவது உதயநிதியை இங்கு உட்கார வைத்துள்ளனர். அவருக்கு துறை அறிவு கிடையாது. அதனால், அவருக்கு பேசத் தெரியவில்லை, ஏதோ ஒன்று பேசவேண்டும் என்பதற்காக பேசுகின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டால் சுத்தமாக வெளியிடப்படும் என்றும், நேர்மையான, நல்ல தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட வாக்காளர் பட்டியல் உதவும் எனவும், தமிழக மக்களின் வாக்குகள் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்துக்கு எப்படிப்பட்ட கம்பெனி தொழில் தொடங்க வேண்டும் என்று தேவையோ அந்த குறிப்பிட்ட கம்பெனியை மட்டும்தான் அழைப்போம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகிறார். இவர்கள் ஏமாற்று வேலை செய்கின்றனர். தகுதியான கம்பெனிகள் இங்கு இல்லை என்று கோரியுள்ளார். மேலும், வியட்நாம் கம்பெனி தமிழகம் வந்தது, பின்னர் ஆந்திரா போய்விட்டதாகவும், இதை நாங்கள் கேள்வி கேட்டால் எங்களுக்கு வயிற்றெரிச்சல் என்று டிஆர்பி ராஜா கூறுகிறார் என்று அண்ணாமலை பேட்டியின் போது கூறியுள்ளார்.
English Summary
Annamalai alleges that the Chief Minister is playing politics over the metro issue in Tamil Nadu