சட்டவிரோத சூதாட்ட விளம்பரம்: சிஐடி அலுவலகத்தின் ஆஜரான நடிகை நிதி அகர்வால்; 29 பிரபலங்கள் மீது வழக்கு..?
Actress Nidhhi Agarwal appears before CID office in illegal gambling advertisement case
தெலங்கானா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தியதாகப் பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 29 திரையுலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்திய புகாரில் பிரபல நடிகை நிதி அகர்வால் சிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயலிகள் மூலம் எளிய மற்றும் நடுத்தர மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபடத் தூண்டுவதாகவும், அவர்களுக்குப் பெரும் பண இழப்பை ஏற்படுத்தியதாகவும், இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறித்த புகாரின் படி, தெலங்கானா கேமிங் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சிஐடி போலீசாரும், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ஏற்கெனவே பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சட்டவிரோத சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்திய நடிகை நிதி அகர்வாலுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, நேற்று ஐதராபாத்தில் உள்ள சிஐடி அலுவலகத்தில் நிதி அகர்வால் ஆஜராகியுள்ளார். அங்கு அவர் அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், 'சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஏனைய பிரபலங்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் எனத் கூறப்பட்டுள்ளது.
English Summary
Actress Nidhhi Agarwal appears before CID office in illegal gambling advertisement case