எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட டிரம்ப் - ஜோஹ்ரான் மம்தானி; திடீரென கைகோர்த்துள்ளதால் ஆச்சரியம்..!
US President Trump meets Indian and origin Mayor Zohran Mamdani
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பு- நியூயார்க் நகரப் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆகிய இருவரும் கடும் விமர்சனங்களையும் மறந்து சந்தித்துப் பேசிக்கொண்டமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 04-ஆம் தேதி நடந்த தேர்தலில் நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜனநாயக சோசலிசவாதியான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது இவரை, டொனால்ட் ட்ரம்ப் 'கம்யூனிசப் பைத்தியம்' என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்துவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.
டிரம்பின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. இவர் வரும் ஜனவரி 01-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இருவருக்கும் இடையில் கடும் மோதல் போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கியுள்ளனர்.

அதாவது, ஜோஹ்ரான் மம்தானி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, நேரில் சந்தித்துப் பேசியுள்ளமை அரசியலில் தலைகீழ் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் சுமூகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்புக்குப் பின் பேசிய டிரம்ப், மம்தானியை 'பகுத்தறிவு மிக்க நபர், எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்' என்று பாராட்டியுள்ளார். மறுபுறம் 'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நகர மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்' என மம்தானி குறிப்பிட்டுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த இருவரும் மக்கள் நலனுக்காகக் கைகோர்த்துள்ளது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
US President Trump meets Indian and origin Mayor Zohran Mamdani