Reels-க்காக “தூய்மை தேவதைகள்” அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்? டிடிவி தினகரன் கண்டனம்!
ammk ttv dhinakaran condemn to tvk govt cm vijay
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?
பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?
சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?
எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
English Summary
ammk ttv dhinakaran condemn to tvk govt cm vijay