திருப்பதி தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal



திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) ஏழுமலையான் கோயில் இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம். உயர் பதவியில் இருக்கும் இவர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகப் பெருமளவில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (ACB) அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

திருப்பதி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஸ்ரீனிவாச ராவ் தலைமையில், அதிகாரிகள் மற்றும் போலிஸார் அடங்கிய தனிப்படையினர் இந்த விரிவான சோதனையை நடத்தினர். லோகநாதத்தின் திருப்பதி தொட்டாபுரம் இல்லம், திருமலையில் அவருக்கு தேவஸ்தானத்தால் ஒதுக்கப்பட்ட 'B-53' குடியிருப்பு, அவரது இரு மைத்துனர்களின் வீடுகள் மற்றும் செல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீடு என மொத்தம் 5 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, திருப்பதி எஸ்டிவி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளையில் லோகநாதத்திற்குச் சொந்தமான லேக்கரிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் முடிவில், பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளின் பத்திரங்கள், தங்க மற்றும் வைர நகைகள், வீட்டு மனைப் பட்டாக்கள், மதிப்புமிக்க வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் கணக்கில் வராத பெரும்தொகை ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதன் மூலம் அதிகாரி லோகநாதம் தன் வருமானத்திற்கு அதிகமாகவே சொத்து சேர்த்துள்ளது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களின் மொத்த சந்தை மதிப்பு எவ்வளவு என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை. திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவரின் வீட்டிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத சொத்துக்களைப் பறிமுதல் செய்த சம்பவம் பக்தர்களிடையேயும் தேவஸ்தான வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ACB Raids TTD Officials Residence and Properties in Disproportionate Assets Case


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->