மதுரையில் அதிமுக தொடர் வெற்றிப்பெற்ற தொகுதியை கேட்கும் அமமுக: அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
AMMK is demanding the constituency in Madurai where AIADMK has consistently won
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியை, அதிமுக கூட்டணியில் தினகரன் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் அமமுக தொடங்கப்பட்ட இந்த மேலூர் தொகுதியில், கால் நூற்றாண்டாக அதிமுக வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவின் கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியை அமமுக கேட்பதால், மதுரை மவாட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அமமுகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. அதன்படி, கூட்டணியில், இடம்பெற்றுள்ள கட்சியினர் தங்கள் விருப்பமான தொகுதிகள் பட்டியலை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக மேலிடத்திடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை மதுரை மாவட்டத்தில் அதிமுக 08 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதேப்போன்று இந்த முறையும், ஐந்து தொகுதிகளையும் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் போட்டியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிமுக தொடர்ந்து இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதன் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இவற்றில் உச்சமாக மேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 2001-ஆம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டு காலமாக வெற்றிப்பெற்று வருகிறது.
இந்த தொகுதியில் அதிமுக 06 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தல் காங்கிரஸ், திமுக இந்த தொகுதியில் வெற்றிப்பெற்று வந்த நிலையில், அதன்பிறகு அதிமுக வசம் இந்த தொகுதி முழுமையாக வந்துள்ளது. இந்த முறையும், அதிமுக இந்த தொகுதியில் களம் இறங்குவதற்கு அந்த தொகுதிக்குட்பட்ட புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மேலூர் பகுதி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அமமுக கட்சி, மேலூரில் தொடங்கப்பட்டதால், அந்த சென்டிமெண்ட்டில் அங்கிருந்து தனது கட்சி எம்எல்ஏ சட்டமன்றத்திற்கு செல்வதற்கு தினகரன் விரும்புவதாக கூறப்படுகிறது. இன்னும் கூட்டணியில் தொகுதிகளை முடிவு செய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை முழுவீச்சில் தொடங்காத நிலையில், அமமுகவின் விருப்பத்தில் மதுரை மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமமுகவினர் தெரிவித்துள்ளதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர், உசிலம்பட்டி தொகுதிகளில் எங்கள் கட்சி (அமமுகவினர்) வேட்பாளர் கனிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். மதுரையில் ஒரு தொகுதியாவது போட்டியிட வேண்டும் என்று அமமுக திட்டமிடுகிறது என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக, உசிலம்பட்டி, மேலூர் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை கேட்கிறதாகவும், அது கிடைக்கும் என்று நம்புவதாகவும், இல்லாவிட்டால் மதுரை கிழக்கு தொகுதியை கேட்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது டிடிவி தினகரன் - பழனிசாமி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தேர்தல் பணியாற்ற தொடங்கிவிட்டனர். இதனால், தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வராது என்று அமமுகவினர் கூறியுள்ளனர்.
English Summary
AMMK is demanding the constituency in Madurai where AIADMK has consistently won