"இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை"என்று இந்தியாவை பெரிதும் நேசித்த பத்ம விருதுகளை வென்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மறைவு..!
British journalist Mark Tully who loved India has passed away
புகழ்பெற்ற பத்திரிகையாளரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் இந்தியப் பிரிவுத் தலைவருமான மார்க் டல்லி தனது 90-வது வயதில் டெல்லியில் நேற்று (ஜனவரி 25) காலமாகியுள்ளார். இவர், 1935-இல் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் பெற்றோருக்கு பிறந்தவர். பெரும்பாலும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியாவிலேயே கழித்துள்ளார்.
பாதிரியார் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் பத்திரிகையாளரானவர் மார்க் டல்லி, இந்தியாவின் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை பதிவு செய்த இவர், 1964-இல் பிபிசியில் சேர்ந்தார். சுமார் 30 ஆண்டுகள் இந்தியாவில் அதன் முகமாகச் செயல்பட்டவர்.
குறிப்பாக, வங்கதேசப் போர், நெருக்கடி நிலை, 'ஆபரேஷன் புளூ ஸ்டார்', இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைகள், பாபர் மசூதி இடிப்பு என இந்தியாவின் பல முக்கிய சம்பவங்களை நேரில் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர்.

அதிலும், இந்திரா காந்தி படுகொலை, போபால் விஷவாயு கசிவு சம்பவம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை உலக அரங்கில் பதிவு செய்த பெருமையை பெற்றவர். இந்திய இதழியல் துறைக்கு ஆற்றிய பங்கிற்காக இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.
அத்துடன், பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'நைட்ஹுட்' பட்டம் வழங்கிய போதும், பிரிட்டனை விட இந்தியாவையே அதிகம் நேசித்தவர். அதாவது, "இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை" என்று மார்க் டல்லி கூறியதும் அவரின் இந்தியா மீதான பற்றை குறிக்கிறது.
English Summary
British journalist Mark Tully who loved India has passed away