எனக்கு சிகரெட் வாசனையே எனக்கு பிடிக்காது.. சிகரெட் பிடிக்காதீங்க! சீனியர் நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய்!
I donot like the smell of cigarettes Donot like cigarettes Vijay advises senior actor
‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் சினிமாவிலிருந்து ஒதுங்கி முழுமையாக அரசியல் களத்தில் இறங்கவுள்ள நடிகர் விஜய், தற்போது ரசிகர்களின் கவனத்தை வேறு ஒரு காரணத்தால் ஈர்த்துள்ளார். அவருடன் நடித்த அனுபவம் குறித்து சீனியர் நடிகர் அனுமோகன் அளித்த பேட்டி ஒன்று, சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.
சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த விஜய், இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது படங்கள் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியில் தொடர்ந்து சாதனை படைத்துவருகின்றன. வாரிசு, பீஸ்ட், லியோ, கோட் போன்ற படங்கள் இதற்கு சான்றாக கூறப்படுகின்றன. சந்தை மதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அதனை விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக நிர்வாகிகளும் ரசிகர்களும் பெருமையாக கூறி வருகின்றனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் வியாபாரம் மற்றும் முன்பதிவு விவரங்கள் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில், மறுநாள் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் போட்டி எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த சூழலில், விஜயின் திரைப்பயணத்தைப் பற்றிய விவாதங்களோடு சேர்ந்து, அவர் நடித்த சில படங்களில் சிகரெட், மது காட்சிகள் இடம்பெற்றதை வைத்து அரசியல் எதிரிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். “இளைஞர்களுக்கு தவறான முன்மாதிரி காட்டும் ஒருவர் அரசியலில் எப்படி நல்ல மாற்றத்தை கொண்டு வருவார்?” என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே, சீனியர் நடிகர் அனுமோகன் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, விஜயின் தனிப்பட்ட குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த பேட்டியில் அனுமோகன் கூறியதாவது:
“ஒரு படத்தில் விஜயுடன் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது விட்டுவிட்டேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். விஜய் என்னிடம் பேச வரும்போது, என் கையில் சிகரெட் இருப்பதைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டார். ‘என்ன தம்பி, என்னாச்சு?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இல்லை அண்ணா, நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள்’ என்றார். ‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்றேன். உடனே, ‘எனக்கு அந்த சிகரெட் வாசமே பிடிக்காது. அது உடல்நலத்துக்கு கேடு. நீங்களும் இதை விட்டுவிடுங்களேன்’ என்று சொன்னார். வயதில் என்னைவிட இளையவராக இருந்தாலும், என் உடல்நலன் மீது அக்கறை கொண்டு அவர் சொன்னது எனக்கு ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
இந்த பேட்டி வெளியானதும், “திரையில் எது நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் விஜய் சிகரெட்டுக்கு எதிரானவர்” என்றும், “இது தான் அவரது உண்மையான குணம்” என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்குள் நுழையவுள்ள இந்த காலகட்டத்தில், அனுமோகனின் இந்த அனுபவம் விஜயின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
I donot like the smell of cigarettes Donot like cigarettes Vijay advises senior actor