ஓபிஎஸ்-க்கு பெரிய தோல்வி.. இன்று கைமாறும் "அதிமுக பைல்ஸ்".. குஷியில் எடப்பாடி..!!
AIADMK documents hand over to CVe Shanmughat as per court orders
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையின் பிறகு ஓபிஎஸ் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கு இபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக முடிந்ததால் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சட்ட திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொது குழுவின் பொழுது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையின் கதவை உடைத்து பொருட்களையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இது இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆவணங்கள் அனைத்தும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கிடையே சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து சி.வி சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு மற்றும் காவல் துறை தரப்பினரின் அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நிலையில் அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை அக்காட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்கும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் இன்று அதிமுக தரப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்படி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் இன்று அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொள்கிறார். இதன் மூலம் அதிமுக பைல்ஸ் மீண்டும் எம்ஜிஆர் மாளிகைக்கு திரும்ப உள்ளதால் இபிஎஸ் தரப்பினர் குஷியில் உள்ளனர்.
English Summary
AIADMK documents hand over to CVe Shanmughat as per court orders