அதிமுகவின் சொத்துகள் குறையவில்லை, உயர்ந்துள்ளன! ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் பதிலடி
AIADMK assets have not decreased they have increased Edappadi Palaniswami camp delivers a sharp retort to Aathav Arjuna remarks
தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குறித்து தெரிவித்த கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் சொத்துகளும் வங்கி இருப்புகளும் குறையவில்லை, மாறாக உயர்ந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் இணைந்து வழிநடத்துவதாக விமர்சித்திருந்தார். மேலும், கட்சியின் சொத்துகள் தொடர்பாகவும் அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக, கட்சியில் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையைத் தவிர வேறு எந்தப் பொறுப்பிலும் இல்லாத மிதுன் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளது.
மேலும், “சொத்து அபகரிப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் சொத்துகள் மற்றும் வங்கி இருப்புகள் உயர்ந்துள்ளதே தவிர குறையவில்லை என்றும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரத்தில், ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு தொடர்பாகவும் அதிமுக தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 2026 தேர்தலுக்கான வேட்புமனுவில் அவர் தெரிவித்த சொத்துகளின் மதிப்பு ரூ.534.90 கோடி என குறிப்பிட்டுள்ள அதிமுக, இவ்வளவு சொத்து எவ்வாறு கிடைத்தது என்பதை ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் விளக்குவாரா என்றும் சவால் விடுத்துள்ளது. அவரது குடும்ப சொத்துகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை அக்கட்சி எழுப்பியுள்ளது.
கூட்டணி விவகாரத்திலும் தவெகவை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியின் சுதந்திரமான முடிவுகளையும் அதிமுக மதிப்பதாகவும், ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் செயல்படும் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுக கூட்டணி குறித்து பேசுவது முரண்பாடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அதிமுகவின் உண்மையான பலம் அதன் தொண்டர்கள்தான் என்றும், கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொண்டர்களின் உழைப்பின் மூலம் தேர்தலை எதிர்கொள்ளும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தவெக, அதிமுக போன்ற தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்தை விமர்சிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK assets have not decreased they have increased Edappadi Palaniswami camp delivers a sharp retort to Aathav Arjuna remarks