இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக அமைச்சரவையில் மாற்றம்? மதுரைக்கு அமைச்சர் பதவி.. கல்லாணை, தங்கப்பாண்டி இடையே போட்டி! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுரையைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் அமைச்சர் பதவிக்காக தங்களது வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் பின்னர் தவெக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள், சர்ச்சைகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலரிடம் இருந்து பொறுப்புகள் மாற்றப்படலாம் அல்லது சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் லண்டன் பயணத்திற்கு முன்பே அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பாலாஜி, ஜெகதீஸ்வரி, தென்னரசு, வினோத் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பதவிகளுக்கும் மாற்றம் வரலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

இதற்கிடையே மதுரை மாநகராட்சி எல்லைக்குள் தவெக சார்பில் புதிய அரசியல் அதிகார மையத்தை உருவாக்கும் நோக்கில், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும், மதுரை மாநகராட்சி எல்லைக்குள் தவெக சார்பில் அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லை என்ற கருத்து கட்சிக்குள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்தே அவருடன் பயணித்து வரும் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரின் பெயர்களும் அமைச்சர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கப்பாண்டி, விஜய்யுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வருபவர் என்றும், ‘வேலாயுதம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு உள்ளிட்ட விஜய் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடக்க காலத்திலிருந்தே பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் கல்லாணையும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர் என்றும், அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது கட்டுப்பாட்டில் இரண்டு தொகுதிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் மதுரையில் கட்சிக்குள் புதிய அதிகார மையம் உருவாகலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதேவேளை, மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் செயல்பாடுகள் குறித்து விஜய் தரப்புக்கு சில புகார்கள் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் மதுரையில் புதிய அரசியல் அதிகார மையத்தை உருவாக்கும் வகையில் கல்லாணை அல்லது தங்கப்பாண்டி ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், அமைச்சரவை மாற்றம் குறித்தும், மதுரையைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்தும் தவெக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் உண்மையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதில்தான் இந்த தகவல்களின் அடுத்த கட்டம் தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cabinet reshuffle for TVK after the byelection A ministerial post for Madurai a contest between Kallanai and Thangapandi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->