மதுரையில் முதல்வர் விஜய்யை சந்தித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்.. மகனுக்காக அடுத்தகட்ட அரசியல் நகர்வா?
Film financier Anbuchezhian met Chief Minister Vijay in Madurai is this the next political move for his son
மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த முதல்வர் விஜய்யை பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தனது மகன் விவேக்குடன் சந்தித்து வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் பல திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் நிதியுதவி செய்திருந்தாலும், சமீபத்திய அரசியல் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் மதுரை வந்திருந்தார். அவரை அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வரவேற்ற நிலையில், அவர்களுக்கு அடுத்ததாக அன்புச்செழியன் தனது மகன் விவேக்குடன் சென்று விஜய்யை சந்தித்தார். அப்போது விஜய்க்கு மீனாட்சியம்மன் சிலையையும் அவர் பரிசாக வழங்கினார்.
அன்புச்செழியன் நீண்ட காலமாக அதிமுக ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தவெக தலைவரான விஜய்யை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. சினிமா பைனான்ஸ் தொழிலில் எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற ஒரு தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தவெக வட்டாரங்களில் விசாரித்தபோது, அன்புச்செழியனுக்கும் விஜய்க்கும் இடையிலான சந்திப்பு திடீரென நடந்தது அல்ல என்று கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே தனது மகன் விவேக்கை அரசியலில் களமிறக்க அன்புச்செழியன் முடிவு செய்திருந்ததாகவும், திமுக அல்லது அதிமுகவை விட தவெக சார்பில் விவேக்கை போட்டியிட வைக்க அவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், மதுரை தெற்கு தொகுதிக்கு விவேக்கை வேட்பாளராக நிறுத்த தவெக தலைமையும் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக சில மணி நேரங்களுக்கு முன்பு விவேக் போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
விவேக் தவெக சார்பில் போட்டியிடுவதை திமுக தரப்பில் இருந்த சில முக்கிய பிரமுகர்கள் விரும்பவில்லை என்றும், அவர்களது வேண்டுகோளைத் தொடர்ந்து அன்புச்செழியன் தனது மகனை தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க வைத்ததாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் விஜய்யை நேரில் சந்திக்க அன்புச்செழியன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும், உடனடியாக அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், முதல்வரின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மூலமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே மதுரையில் விஜய்யை அன்புச்செழியன் தனது மகனுடன் சந்தித்ததாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கைநழுவிய நிலையில், அடுத்ததாக மக்களவைத் தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் தனது மகனை களமிறக்க விவேக் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மதுரை மாநகராட்சி மேயர் பதவியை தனது மகனுக்கு பெற்றுத்தருவதற்கான அரசியல் நகர்வுகளை அன்புச்செழியன் மேற்கொள்ளக்கூடும் என்ற பேச்சும் தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதனால் மதுரையில் விஜய்யை அன்புச்செழியன் சந்தித்தது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது தனது மகனின் அரசியல் எதிர்காலத்திற்கான தொடக்க நகர்வா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கான தெளிவு அடுத்தடுத்த உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நகர்வுகளில்தான் தெரியவரும்.
English Summary
Film financier Anbuchezhian met Chief Minister Vijay in Madurai is this the next political move for his son