கந்து வட்டி மிரட்டல்: இளம் பெண்ணுக்கு வட்டி கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது!
ADMK member arrested for kanthuvatti case
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு மாதம் ரூ. 10,000 கந்து வட்டி கேட்டு இளம் பெண்ணை மிரட்டியதாக அதிமுக நகர இளைஞரணிச் செயலாளர் செந்தில்குமார் என்பவரைப் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கந்து வட்டி புகார்:
பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனி பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முத்துகவுண்டன் லேஅவுட்டைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. இந்தக் கடனுக்காக மாதம் ரூ. 10,000 கந்து வட்டி தர வேண்டும் என்று செந்தில்குமார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தீபா, முதல் மூன்று மாதங்கள் சரியாக வட்டியைச் செலுத்தி வந்துள்ளார். ஆனால், இந்த மாதம் வட்டிப் பணம் கொடுக்க முடியாததால், செந்தில்குமார் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பணத்தைத் திருப்பித் தரச் சொல்லித் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.
சட்ட நடவடிக்கை:
இதனால் பாதிக்கப்பட்ட தீபா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கிழக்கு காவல் நிலைய போலீசார் செந்தில்குமார் மீது கந்து வட்டிச் சட்டம் மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
ADMK member arrested for kanthuvatti case