தமிழ் நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரின் அந்த அறிக்கையில், "அதிமுகவை சேர்ந்த 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் கழகத்தின் சார்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக R.B. உதயகுமார், MLA., அவர்களையும், துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, MLA., அவர்களையும் நியமிக்கக் கோரியும்; R.B. உதயகுமார் அவர்களை தமிழ் நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமிக்கக் கோரியும்; 11.7.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம் மற்றும் P.H. மனோஜ்பாண்டியன் ஆகிய மூவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதையும், உரிய உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் என்று, 19.7.2022 முதல் 4 முறை கடிதங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்கிய 17.10.2022 வரை எந்தவிதமான பதிலும் சட்டமன்றப் பேரவைத் தலைவரிடமிருந்து கிடைக்கப்பெறாததால், நேற்று (18.10.2022) காலை 9.15 மணியளவில் மீண்டும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றப் பேரவைத் தலைவரை, அவரது அறையில் சந்தித்து நமது கடிதங்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினோம். மீண்டும், அன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற பேரவையில் நமது கோரிக்கையை வலியுறுத்திப் பேச முற்பட்ட போதும், சட்டமன்றத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, சட்டமன்றப் பேரவையில் நமது கடமையை ஆற்றவிடாமல் வலுக்கட்டாயமாக கழக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றினார்கள்.
சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றியவுடன், சட்டமன்றப் பேரவையில் நமது கட்சியில் உள்ள பதவியைப் பற்றியும், சட்டமன்ற கட்சிப் பதவிக்கும் முடிச்சு போட்டுத் தேவையின்றி பேசியுள்ளார். இவ்வாறு கட்சிப் பதவியையும், சட்டமன்றக் கட்சிப் பதவியையும் பற்றி சட்டமன்றத்தில் ஒப்பீடு செய்து பேசுவது, சட்டமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் செயலாகும்.
சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும், அவர்களது விருப்பத்தைப் பொருத்துமே ஒருவர் முதலமைச்சராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ மற்றும் இதரப் பதவிகளுக்கோ வரமுடியும். ஆனால், பேரவைத் தலைவர் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 62 சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது ஜனநாயகப் படுகொலையாகும்.
இந்த மழைக்கால கூட்டத் தொடரில், நாங்கள் மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளான, மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களுக்கு அம்மாவின் அரசில் வழங்கியது போல 20 சதவீத போனஸ், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா போன்ற போதைப் பொருள் நடமாட்டம், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் (Zero Hour) இதைப் பற்றியெல்லாம் எழுப்பக் கூடாது என்பதற்காக ஆளும் விடியா அரசும், அதற்கு ஒத்து ஊதும் புதுக் கூட்டாளிகளும் சேர்ந்து செய்த சதியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்.

எனவே தான், சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்தும், மாபெரும் மக்கள் இயக்கத்தைப் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு ஒரு சிலரை B டீமாக பயன்படுத்தும் விடியா அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் 19.10.2022 இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்து, உரிய நடைமுறையின்படி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் கடிதம் வழங்கினோம்.
ஆனால், உரிய அனுமதி நமக்கு காவல் துறையினரிடம் இருந்து கிடைக்கப் பெறாததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி இன்று காலை அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வள்ளுவர் கோட்டத்திற்கு கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என திரளாக நாம் வந்த போது, இந்த விடியா அரசின் காவல்துறை அனைவரையும் தடுத்து கைது செய்தது. கழக நிர்வாகிகள் அனைவரையும், சென்னை மாநகர காவல்துறை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் இந்த விடியா அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது.
இந்த அறப்போர் மகத்தான வெற்றியடைய தோளோடு தோள் நின்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K. வாசன், M.P., அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், MLA., அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் K. கிருஷ்ணசாமி, Ex. MLA., அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் அவர்களுக்கும், மேலும், தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கும், உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களோடு கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை M. ஜெகன்மூர்த்தி, MLA., அவர்களுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தோழமைக் கட்சியினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது, காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட திரு. ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து இடங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



English Summary
ADMK EPS thenks to all support protest