10 ஆண்டுகளில் பல பிளவுகள்; பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல்; அதிமுகவில் நடப்பது என்ன..? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, 47 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்து 03-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கடந்த ஆட்சியில் பிரதான எதிர் கட்சியாக இருந்த அதிமுகவில் பெரியளவில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளமை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

முன்னாள் அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் அதிமுகவுக்கு தொடர்ந்து சரிவுகள்தான் வந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா முதல்வராக தயாரானபோது ஓ.பன்னீர்செல்வம் மூலம் முதல் பிளவு ஏற்பட்டது. அடுத்து, பழனிசாமி முதல்வரானார். அப்போது சசிகலாவும், தினகரனும் தூக்கியெறியப்பட்டனர். அப்போது இரண்டாவது பிளவை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் பல முக்கிய தலைவர்கள் ஏனைய கட்சிகளுக்கு தாவி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அடுத்ததாக, அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சித்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தவெகவு தாவிய நிலையில் தற்போது அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். அடுத்து, ஜேசிடி பிரபாகரனும் தவெக-வில் இணைந்துள்ளார். இறுதியாக அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ்சும் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா என பலரும் திமுகவில் இணைந்தனர். 

கடந்த 50 ஆண்டுகாலமாக ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என இருந்து வந்த அதிமுக இப்போது மூன்றாவது கட்சியாக மாறியுள்ளது. பல தொகுதிகளில் 03-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக, கணிசமான தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது பேரதிர்ச்சியை அக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுத்தது.

இந்நிலையில், அதிமுகவில் பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளதால், வேலுமணியின் கை ஓங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களிலும் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது, அங்குள்ள எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் பின்னால் அணி திரண்டுள்ளனர்.

இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் பக்கம் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர் திரண்டுள்ளனர். கடந்த  2017-இல் அதிமுக பழனிசாமி வசம் கட்சி சென்றது முதல் ஒரு தேர்தலில் கூட கட்சி வெற்றிபெறவில்லை. தொடர்ந்து 11 தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ள்ளது. கடந்த தேர்தலில் சரியான கூட்டணி வைக்க இபிஎஸ் தவறிவிட்டுள்ளதாகவும், தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த குழப்பகரமான சூழலில், அதிமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும் நியமிக்க தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களின் பக்கம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் பழனிசாமியை தலைவராக்க 17 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பழனிசாமி பக்கம் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவும் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நிரந்தரமாக மூன்றாவது கட்சியாகி கரைந்து விடுவோம் என பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றியதாக வும், அதிகம் உறுப்பினர்களை கொண்ட வேலுமணி - சண்முகம் தரப்பு தவெகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமைச்சரவையில் இணையும் திட்டமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்க மாட்டேன் என தவெக தரப்பு கூறியுள்ள நிலையில், அதிமுகவின் ஆதரவை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில், பாஜகவின் ஆதரவு வேலுமணிக்கா அல்லது பழனிசாமிக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளாக பல பிளவுகளையும், முக்கிய தலைவர்களையும் இழந்து, தொடர்ந்து 11 தோல்விகளில் தத்தளிக்கும் அதிமுக தொண்டர்கள், இன்னொரு பிளவை தாங்கிக்கொள்வார்களா..?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A rift has emerged within the AIADMK due to the conflict that has erupted between Palaniswami and the Velumani and Shanmugam duo


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->