85% வாக்குப்பதிவு... இது தமிழகம் காணாத புரட்சி...! - தவெக தலைவர் விஜய் அதிரடி அறிக்கை...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று உற்சாகக் களமாக நடைபெற்றது. மக்களின் அதீத பங்கேற்பை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அபூர்வமான சாதனையை முன்னிட்டு, “தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா” என்ற சொற்றொடரின் உண்மையான அர்த்தம் இன்றுதான் முழுமையாக வெளிப்பட்டுள்ளது என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான மக்களே, உங்களுக்கெல்லாம் என் இதயம் கனிந்த வணக்கங்கள். அரசியல் என்பது சிலர் மட்டுமே அனுபவிக்கும் ஒரு தனிச்சொத்து என்ற மாயை நீண்ட காலமாக நிலவி வந்தது. அனுபவம் வாய்ந்தோர், அதிகாரத்தில் இருப்போர் மட்டுமே அரசியலை வழிநடத்த முடியும் என்ற கருத்துக்களை, சாதாரண மக்களின் எழுச்சி சிதறடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என எண்ணப்பட்ட இளைஞர்களும் பெண்களும் இன்று தங்கள் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம்.

இதுவரை வாக்குச்சாவடிகளுக்கே வராத வாக்காளர்கள் கூட, 2026 ஏப்ரல் 23 நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் கலந்து கொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத உயரமான அளவாகும். வாக்குச்சாவடிகள் எங்கும் கோயில்களை ஒத்த திரளான கூட்டம் காணப்பட்டது. குடும்பம் தோறும், குழந்தைகளுடன் வந்து வாக்களித்த மக்கள் காட்சி கண்களை கவர்ந்தது.

வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்தவர்கள் கூட, வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியுடன் செலவு செய்து வந்து ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றியுள்ளனர்” என அவர் பாராட்டியுள்ளார்.

“தேர்தல் திருவிழா என்ற சொல்லின் உண்மையான உணர்வு, 2026 ஏப்ரல் 23 அன்று தான் தமிழகம் முழுவதும் உணரப்பட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே; மாற்றத்தின் பாதை இனி தொடரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “இந்த ஜனநாயக விழாவை அர்த்தமுள்ளதாக மாற்றிய தமிழக மக்களான என் குடும்ப உறுப்பினர்களுக்கு பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

நம் வாக்குச்சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும், அவர்களுக்கு துணைநின்ற குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள். நம்பிக்கையுடன் முன்னேறுவோம்; நல்லதே நடைபெறும்; வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

85percentage turnout This revolution that Tamil Nadu never seen Tvk leader Vijay dramatic statement


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->