ஆளுநரின் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்..!
25 IAS Officers Transferred Including the Governors Secretary
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடமாற்றங்கள், புதிய அரசின் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியத் துறை செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள்:
ஆளுநரின் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து மாநிலத் தலைமைச் செயலாளர் சாய் குமார் அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக இருந்த சஜன்சிங் ஆர். சவான், ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியரான ரஷ்மி சித்தார்த் ஜகடே, உயர்கல்வித் துறையின் அரசு சிறப்புச் செயலாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதேப்போன்று, அறிவியல் நகரத்தின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்த ஹர் சகாய் மீனா, நிலச்சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக இருந்த அஜய் யாதவ், பால் வளத்துறை ஆணையராகவும் ஆவின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேப்போன்று, அத்துறையின் இயக்குநராக இருந்த குமாரவேல் பாண்டியன், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, திருநெல்வேலி ஆட்சியரான சுகுமார், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள்:
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரஞ்ஜீத் சிங்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராக (பணிகள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய மாநகராட்சி ஆணையர்கள்:
எல்காட் (ELCOT) இயக்குநராகப் பணியாற்றிய தீபனவிஸ்வேஸ்வரி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) இருந்த பிரித்விராஜ் கரூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேப்போன்று, சிதம்பரம் சார்-ஆட்சியராக இருந்த கிசான் குமார், கடலூர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் சார்-ஆட்சியர்களாக சிறப்பாகப் பணியாற்றிய பல அதிகாரிகளுக்குக் கூடுதல் ஆட்சியர்களாக (வளர்ச்சி மற்றும் திட்ட அலுவலர்) பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், குன்னூர் சார்-ஆட்சியராக இருந்த சங்கீதா, உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
25 IAS Officers Transferred Including the Governors Secretary