வாடும் பயிர்களைக் கண்டு கலங்காதீங்க...! - வெயிலை சமாளிக்க தோட்டக்கலைத்துறையின் சூப்பர் டிப்ஸ்...!
Dont be alarmed by wilting crops Horticulture super tips deal heat
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டாரத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சி தாக்கத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் நோக்கில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தியாகதுருகம் அருகேயுள்ள பிரிதிவிமங்களம் மற்றும் புக்குளம் கிராமங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சீ. கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். தொடர்ந்து தியாகதுருகம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கத்தரி, வாழை, சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, கீரை உள்ளிட்ட பயிர்கள் விளைந்த வயல்களுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
வெப்பத்தால் பயிர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, சொட்டு நீர் பாசன முறையை அமைத்தல், பிளாஸ்டிக் நிலப்போர்வை பயன்படுத்துதல், இயற்கை உரங்கள் மற்றும் கரிம இடுபொருட்களை பயன்படுத்துதல், உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோலால் நிலத்தை மூடுதல் போன்ற நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை ஊட்டச்சத்துகளை பயன்படுத்துவதன் மூலம் இலைகளின் வெப்ப அழுத்தம் குறையும் என்றும், அதிக வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் உயர்தர ரகங்களை தேர்வு செய்து பயிரிடுவது சிறந்த பலனை தரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பயிர்களுக்கு போதிய இடைவெளி விட்டு நடவு செய்தல், தேவையற்ற களைகளை அகற்றுதல், அதிக நைட்ரஜன் உரங்களை தவிர்த்து பொட்டாசியம் சத்து நிறைந்த உரங்களை பயன்படுத்துதல் போன்ற முறைகள் பயிர்களின் வறட்சியைத் தாங்கும் திறனை அதிகரிக்கும் என விளக்கப்பட்டது.
நீர் பற்றாக்குறை நிலவும் நேரங்களில், பொட்டாசியம் குளோரைடு 0.5 சதவீதம் அல்லது டி.என்.ஏ.யு.இ.பி.பி.எப்.எம் 1 சதவீதம் தெளிப்பதன் மூலம் நீராவி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்றும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே நீர் பாய்ச்சுவது பயிர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மண்ணில் கம்போஸ்ட் மற்றும் மண்புழு உரம் போன்ற கரிமப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் நீர் பிடிப்புத் திறன் அதிகரித்து, வறட்சியை சமாளிக்க உதவும் என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. உமா, துணை தோட்டக்கலை அலுவலர் நா. செந்தில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜ. சரவணன், பிரபு, சே. சரண்யா, அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
English Summary
Dont be alarmed by wilting crops Horticulture super tips deal heat