விநாயகர் ஊர்வலத்தில் பெண்களிடம் அத்துமீறல்...! உப்பள்ளியில் பதற்றம்...! - காவலர்கள் தடியடி
Women harassment Ganesha procession Tension Uppalli Police lathicharge
கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தார்வார் மாவட்டம் உப்பள்ளியிலும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மராட்டிய மக்கள் அதிகம் வசிக்கும் மராட்டா பகுதியில் இருந்து ஒரு விநாயகர் சிலையும், மேதார் ஓணி மற்றும் கலால் ஓணி பகுதிகளில் இருந்து தலா ஒரு சிலையும் என மொத்தம் 3 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.3 விநாயகர் சிலை ஊர்வலங்களும் ஒரே நேரத்தில் இரவு 9.30 மணியளவில் சி.பி.டி. சாலையை வந்தடைந்தன.

இதனால் அந்த சாலையில் மக்கள் கூட்டம் பெருமளவில் திரண்டது. ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்ததால் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.மூன்று ஊர்வலங்களிலும் ஒலிபெருக்கிகளில் இசை முழங்க, இளைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்திக்கொண்ட சில மர்ம நபர்கள், கலால் ஓணி பகுதியில் இருந்து வந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தமிட்டு கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் காரணமாக அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நபர்களை மற்றொரு தரப்பினர் பிடித்து தாக்க முயன்றனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கு பதற்றமான சூழல் உருவாகி, வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டது.நிலைமை கைமீறுவதை உணர்ந்த காவலர்கள் உடனடியாக கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், அதிகளவில் மக்கள் திரண்டிருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
காவலர்களின் நடவடிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு திரண்டிருந்தவர்களை காவலர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக உப்பள்ளி டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படும் மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து உப்பள்ளி-தார்வார் காவல் கமிஷனர் பூஷண் போரசே தெரிவிக்கையில், ஒரே நேரத்தில் 3 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலங்கள் சி.பி.டி. சாலைக்கு வந்ததால் அங்கு கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டது.
இந்த நெரிசலை பயன்படுத்தி சிலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்துள்ளன.இதுவரை 30 பெண்கள், மர்ம நபர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்றத்தை கட்டுப்படுத்தவே காவலர்கள் தடியடி நடத்தினர்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
English Summary
Women harassment Ganesha procession Tension Uppalli Police lathicharge