ரெயில் பயணியிடம் 26 பவுன் நகை அபேஸ்...! தப்பியோடிய முதிய தம்பதியை சினிமா பாணியில் பிடித்த காவலர்கள்...! நடந்தது என்ன...?
Train passenger robbed 26 pounds jewelry Cops catch fleeing elderly couple cinematic style What happened
சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயிலில் பெண் பயணியிடம் கொள்ளையடிக்கப்பட்ட 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம், துரிதமாக செயல்பட்ட ரெயில்வே காவலர்களால் வெறும் 2 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் இரும்புலியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த சேதுவின் மனைவி மகாதேவி. இவர் மானாமதுரைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து தாம்பரம்-மதுரை கூடல் விரைவு ரெயிலில் பயணம் செய்துள்ளார்.சாதாரண பயணச்சீட்டு பெற்றிருந்த அவர், ரெயில் என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.

அவருடன் சுமார் 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்த பையும் இருந்தது.ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தபோது, தான் வைத்திருந்த நகை மற்றும் பணப்பை காணாமல் போனதை மகாதேவி கவனித்தார். இதையடுத்து உடனடியாக ரெயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மதுரை ரெயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ரெயில் மதுரை வந்ததும், ரெயில்வே பாதுகாப்புப் படை ஏட்டு சத்தியமூர்த்தி குறிப்பிட்ட பொதுப்பெட்டியில் ஏறி தீவிரமாக சோதனை மேற்கொண்டார். ஆனால், மகாதேவியின் நகைப்பை அங்கு கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, வயதான தம்பதி ஒருவர் மகாதேவியின் பையுடன் சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.இந்த காட்சி காவலர்களின் விசாரணைக்கு முக்கிய தடயமாக அமைந்தது.உடனடியாக விருதுநகர் ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுடலை, ஏட்டு முருகன் மற்றும் தமிழக ரெயில்வே காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் சம்பந்தப்பட்ட ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தைக் கடந்து சென்றுவிட்டது. இதனால் விருதுநகர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான அந்த தம்பதி ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் விருதுநகர் பஸ் நிலையத்துக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் விரைந்து பஸ் நிலையத்துக்குச் சென்றனர்.அங்கு நின்றிருந்த வயதான தம்பதியை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த காளியப்பன் (66), அவரது மனைவி சோலையம்மாள் (62) என்பது தெரியவந்தது.
மேலும், மகாதேவியின் நகை மற்றும் பணம் இருந்த பையை இருவரும் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து தம்பதியிடம் இருந்த மகாதேவியின் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
ரெயிலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட தகவல் கிடைத்த சுமார் 2 மணி நேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்ட தம்பதியை பிடித்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக மதுரை ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து காளியப்பன் மற்றும் சோலையம்மாளை கைது செய்தனர்.
பின்னர் இருவரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இருவரது வயது முதிர்வைக் கருத்தில் கொண்ட நீதிபதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
English Summary
Train passenger robbed 26 pounds jewelry Cops catch fleeing elderly couple cinematic style What happened