முகூர்த்த நேரத்தில் நடந்த திடீர் திருப்பம்...! திடீரென காவலர்களுக்கு போன் போட்ட மணப்பெண்...! - திருவள்ளூரில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணம்...! - Seithipunal
Seithipunal


திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து, முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் திடீரென எடுத்த முடிவால் திருமண மண்டபமே பரபரப்பானது. தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்த அவர், திருமணத்தையும் நிறுத்தியதால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இதையொட்டி, இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.நேற்று அதிகாலையில் திருமணத்துக்கான முகூர்த்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பி, திருமணத்துக்குத் தயாராகும்படி தெரிவித்தனர்.ஆனால், மணப்பெண் திருமணத்துக்கு தயாராக மறுத்ததுடன், ஒப்பனை செய்துகொள்ளவும் விருப்பமில்லை என்றும், மணவறைக்கு வரமாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், தாலி கட்டிக்கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மேலும் சிக்கலானதைத் தொடர்ந்து, அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மணப்பெண் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு, தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் மீஞ்சூர் காவலர்கள் மற்றும் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அப்போது திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதில் மணப்பெண் உறுதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, திருமணம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, மணப்பெண்ணை திருமண மண்டபத்தில் விட்டுவிட்டு அவரது பெற்றோர் அங்கிருந்து சென்றனர். தனியாக இருந்த மணப்பெண்ணை காவலர்கள் பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

திருமணம் திடீரென நின்றதால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களும் உடனடியாக அகற்றப்பட்டன.மணப்பெண் இந்த திருமணத்தை மறுத்ததற்கான காரணம் என்ன? அவர் வேறு யாரையாவது காதலிக்கிறாரா? அல்லது இரு குடும்பத்தினருக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மீஞ்சூர் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sudden twist right time bride suddenly called police wedding stopped Thiruvallur


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->