தொகுதி மறுவரையறை விவகாரம்...! தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தி.மு.க...! - கனிமொழி தீவிர ஆலோசனை
Constituency redelineation issue DMK attempt to form third team national level Kanimozhi gives serious advice
நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், தேசிய அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுப்பது குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி மும்பை பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்துக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கு சென்ற கனிமொழியை, உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் வரவேற்று பொன்னாடை அணிவித்தார். இந்த சந்திப்பின்போது உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனில் தேசாய், மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம், எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் அவற்றின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சுமார் ஒரு மணி நேரம் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி டெல்லியில் சந்தித்து பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியுடன் முரண்பாடு கொண்டுள்ள மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து, தேசிய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை தி.மு.க. முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளாகவே கனிமொழியின் அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகள் பார்க்கப்படுகின்றன.இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்ததாவது,"உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை நேரடியாக பாதிக்கக்கூடிய தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது. ஆனால், அந்த கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்தது.
இதேபோல், மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. இந்த அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, மூன்றாவது அணிக்கான ஆதரவை திரட்டும் வகையில் பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களை கனிமொழி அடுத்தடுத்து சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்தகட்டமாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் கனிமொழி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்திக்க உள்ளார். தொடர்ந்து, தேசிய அளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.
English Summary
Constituency redelineation issue DMK attempt to form third team national level Kanimozhi gives serious advice