நெல்லை ஆம்னி பேருந்து கொள்ளை வழக்கில் அதிரடி...! மத்தியபிரதேசத்தில் சிக்கிய முக்கிய குற்றவாளி...! - 40 பவுன் நகைகள் மீட்பு...!
Action Nellai Omni bus robbery case main culprit caught in Madhya Pradesh 40 pounds jewelry recovered
நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தம்பதியினர், உணவு சாப்பிடச் சென்ற நேரத்தில் அவர்களின் கைப்பையில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.நெல்லை மாவட்டம் பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (56).

இவரது மனைவி ஜூலியட், தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இருவரும் சென்னையில் வசித்து வரும் தங்களது மகனை சந்திப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி இரவு நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்தில் புறப்பட்டனர். பயணத்தின்போது சுமார் 40 பவுன் தங்க நகைகளை ஒரு கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்த பின்னர், கரிசல்குளம் விலக்கு அருகே சாலையோர உணவகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது. பயணிகள் உணவு அருந்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை அங்கு நிறுத்தியுள்ளார்.இதையடுத்து ஜஸ்டினும், ஜூலியட்டும் நகைகள் இருந்த கைப்பையை பேருந்திலேயே வைத்துவிட்டு கீழே இறங்கி உணவு சாப்பிடச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் பேருந்துக்குத் திரும்பினர்.
அப்போது கைப்பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காயத்தாறு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் காயத்தாறு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பேருந்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பதிவான செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.
இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்படியும், கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா ஆலோசனையின்படியும், கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவலர்கள் மத்தியபிரதேசத்துக்கு விரைந்து சென்று குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மக்சூத் கான் (35) என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜஸ்டின்-ஜூலியட் தம்பதியினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.இந்த கொள்ளை சம்பவத்தில் மக்சூத் கானுடன் தொடர்புடைய ரபிக் (40), கடுக்கான் என்ற முகதின் கான் ஆகிய இருவரும் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை தனிப்படை காவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மக்சூத் கானை தனிப்படை காவலர்கள் நேற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய இருவரையும் பிடிக்க காவலர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Action Nellai Omni bus robbery case main culprit caught in Madhya Pradesh 40 pounds jewelry recovered