மேற்கு வங்கத்தில் மீண்டும் பயங்கரம்: மருத்துவக் கல்லூரி மாணவி தரதரவென இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை!
WB Medical college student assault
மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் ஷோபாபூர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொல்கத்தாவிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒடிசா மாநில ஜலேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி அங்குப் படித்து வருகிறார்.
நேற்று இரவு 8.30 மணியளவில், அவர் கல்லூரி வளாகத்தை விட்டு தனது ஆண் நண்பருடன் அருகிலுள்ள உணவகத்துக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் ஒருவர் அவரது நண்பரை தாக்கி அங்கிருந்து துரத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின், அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மருத்துவமனை வளாகத்தின் ஒதுக்குப்புறத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. சம்பவம் நடந்த நேரத்தில் வளாகத்தில் எந்த பாதுகாப்பு காவலரும் இல்லாதது வெளிச்சமிட்டுள்ளது.
மாணவி கடுமையாக காயமடைந்த நிலையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்தையும் போராட்டத்தையும் தூண்டியிருந்தது. அந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அதேபோன்று, தற்போது மீண்டும் மருத்துவ மாணவியொருவர் மீது நிகழ்ந்த இந்த வன்கொடுமை சம்பவம் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தி மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
WB Medical college student assault