அவசர விசாரணை செய்ய முடியாது...! - டெல்லி இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி முடிவு...!
Urgent investigation cannot be done Supreme Court dramatic decision Delhi youth attack case
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகவும், தேர்வு தோல்வியால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் இருந்து மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்று வருகின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் பேரணி நடத்தினர். நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால், பேரணி நடைபெற்ற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணியைத் தடுக்க பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நிலைமையை கட்டுப்படுத்த காவலர்கள் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக காவலர்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.காவலர்கள் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளன. மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் டெல்லியில் திரண்டு வருவதால், தலைநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் முறையிட்டார்.
அப்போது, “எங்களது நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அந்த வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.தொடர்ந்து, நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதனை மையமாகக் கொண்டே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது அவரது வாதத்தை இடைமறித்த நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர், “மிக்க நன்றி” என்று கூறி அவரது வாதத்தை முடித்தனர்.
மேலும், ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அதுதொடர்பான காணொலிகளையும் அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், “காணொலிகளைப் பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கான நேரமும் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.
English Summary
Urgent investigation cannot be done Supreme Court dramatic decision Delhi youth attack case