இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது..மத்திய மந்திரி சொல்கிறார்!
There will be no fuel shortage in India..says the central minister
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் -இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளதனால் ஈரானில் உள்ள 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக நமது இறக்குமதியை நாம் பன்முகப்படுத்தியுள்ளோம். எனவே, நமது எரிபொருள் இறக்குமதியின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவது இல்லை. "கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
நமது நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் பல வாரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பை வைத்துள்ளன. மேலும் பல வழித்தடங்களில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகம் நடந்து வருகிறது. நமது குடிமக்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
There will be no fuel shortage in India..says the central minister