பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் புதிய விதிமுறைகள்; மத்திய அரசு அதிரடி திட்டம்..! - Seithipunal
Seithipunal


இந்தியக் குடியுரிமை என்பது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (Citizenship Act, 1955) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இச்சட்டத்தின்படி, ஒரு நபர் பிறப்பு (பிரிவு 3), மரபுவழி (பிரிவு 4), பதிவு செய்தல் (பிரிவு 5), தம்விருப்பாகப் பெறுதல் (பிரிவு 6-NATURALIZATION ) அல்லது நிலப்பகுதிகளை இணைத்தல் (பிரிவு 7) ஆகிய வழிமுறைகளின் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். 

இந்தக் குடியுரிமையைப் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் இச்சட்டத்தின் படியே தீர்மானிக்கப்படுகின்றன.  இச்சட்டத்தின் வகைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக இருக்க முடியும்.

இந்தியக் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் ஒரு நபரின் பிறப்பு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, இந்திய ஆட்சி நிலவரையில் பிறந்த எவரொருவரும் (அவரின் பெற்றோரில் ஒருவராவது இந்தியா குடிமகனாக இருக்க வேண்டும்) இந்த நாட்டின் குடிமகன் ஆவார். 

இதன் காரணமாகவே பிறப்புச் சான்றிதழ் நாட்டின் மிக முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறப்படுவதைத் தடுக்கும் வகையில் ‘பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில்’ (The Registration of Births and Deaths Act) மத்திய அரசு புதிய  திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது.

அதாவது, தற்போதைய நடைமுறைப்படி, பிறப்பு/இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேல் தாமதமாகப் பதிவு செய்வதாக இருந்தால், மாவட்ட நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நிர்வாக நடுவர் (Executive Magistrate) ஆகியோர் அனுமதி பெற்ற பின்பே பதிவு செய்ய முடியும். இந்த வசதிக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால்,வரவுள்ள புதிய திருத்தத்தின் கீழ், பிறப்பு/இறப்பு நிகழ்ந்து, இரண்டு ஆண்டுக்குள் மட்டுமே மாவட்ட நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நிர்வாக நடுவர் (Executive Magistrate) ஆகியோர் அனுமதி செல்லுபடியாகும். 

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு, முதன்மை நீதித் துறை நடுவரின் உத்தரவின் (Judicial Magistrate of the first class) பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு இச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி (THE REGISTRATION OF BIRTHS AND DEATHS (AMENDMENT) ACT, 2023) பள்ளி/கல்லூரி சேர்க்கை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார், பாஸ்போர்ட், திருமணப் பதிவு வரை அனைத்திற்கும் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே ஒற்றை முதன்மை ஆவணமாக  அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் தவறான முறையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதைத் தடுக்கும் விதமாக இந்த புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government is planning to introduce new rules for obtaining birth certificates


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->