பசு பாதுகாவலர் 'ஃபர்சா வாலே பாபா' வாகன விபத்தில் பலி; வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்; போர்க்களமாக டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலை..!
Supporters resort to violence after cow vigilante Farsa Wale Baba dies in a vehicle acciden
உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவின் நவிபூர் கிராமத்திற்கு அருகே, 'ஃபர்சா வாலே பாபா' என அழைக்கப்படும் பசு பாதுகாவலர் சந்திர சேகர். இவர் நேற்று நள்ளிரவு, பசு கடத்திச் செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நாகலாந்து பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் சென்ற இருசக்கர வாகனம் மீது ஒரு லாரி மோதியதில் அவர் சம்பாஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல், கிராம மக்களிடையே பரவியது. இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி இன்று அதிகாலை முதல் அவரது ஆதரவாளர்கள் டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீசார் உட்பட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். மேலும், அரசு வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்துள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தடியடி நடத்த நேரிட்டது. மதுராவின் முக்கியமான சந்திப்புகள் மற்றும் பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சந்திரசேகர், பசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரஜ் பகுதியில் பரவலாக அறியப்பட்டவர். அவரது மரணம், ஆதரவாளர்கள் மத்தியில் துக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தலையிட்டு அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, போராட்டக்காரர்கள் இறுதியில் கலைந்து செல்ல சம்மதிக்க வைக்கப்பட்டதாக சில உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, போராட்டம் கலைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே தொடர்கிறது.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மதுரா எஸ்.எஸ்.பி சுலோக் குமார் கூறுகையில்; ஃபர்சா வாலே பாபா ஒரு வாகனத்தில் பசு கடத்தப்பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, அதிகமான பனிமூட்டம் காரணமாக ராஜஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வாகனம் பாபா சென்ற வாகனம் மீது மோதியதில் உயிரிழந்திருக்கிறார். அவர் சந்தேகித்த வாகனத்தில், மளிகைப் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் இரும்புக் கம்பிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பசு கடத்தப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பசு பாதுகாவலர் ஃபர்சா வாலே பாபா-வின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Supporters resort to violence after cow vigilante Farsa Wale Baba dies in a vehicle acciden