நீட் தேர்வு ரத்து; இது வெறும் தோல்வி மட்டுமல்ல; இது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு குற்றம்; பாஜக அரசை விமர்சித்துள்ள ராகுல்காந்தி..! - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக (நீட் தேர்வு) நாடு முழுவதும் கடந்த 03-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை எழுந்த நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அத்துடன், வினாத்தாள் கசிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், மறு தேர்வு குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; 

''நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள், கனவுகள் இந்த ஊழல் மிகுந்த பாஜக ஆட்சியால் நசுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்காக சில அப்பாக்கள் கடன் வாங்கினர், சில அம்மாக்கள் தங்கள் நகைகளை விற்றனர். லட்சக்கணக்கான மாணவர்கள் இரவெல்லாம் கண்விழித்துப் படித்தனர். ஆனால் அதற்குப் பரிசு, வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் அரங்கேறும் திட்டமிட்ட ஊழல் மட்டுமே. இது வெறும் தோல்வி மட்டுமல்ல, இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு எதிரான ஒரு குற்றம்.

ஒவ்வொரு முறையும் வினாத்தாள் கசிவு மாபியாக்கள் எவ்வித தண்டையும் இன்றி தப்பிவிடுகின்றனர். அதேநேரத்தில், நேர்மையான மாணவர்களே அதற்கான தண்டனையைச் சுமக்க வேண்டி உள்ளது. இப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சல், பொருளாதாரச் சுமை, நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒருவரின் எதிர்காலம் என்பது கடின உழைப்பால் அல்லாமல், பணம் மற்றும் செல்வாக்கால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்றால், கல்விக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

‘அமிர்த காலம்’ என்று பிரதமரால் சொல்லப்படும் இந்த காலகட்டம் நாட்டுக்கு ஒரு ‘விஷக் காலமாகவே’ மாறிவிட்டது'' என பாஜக அரசை ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi criticizes the BJP government over the NEET exam cancellation issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->