பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 15 வயது காஸ்மீர் சிறுவன்; போதை மருந்து கடத்தல்காரனுடனும் தொடர்பு; பஞ்சாப் போலீசார் விசாரணை..!
Punjab police have arrested a 15 years old Kashmiri boy for spying for Pakistan
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வந்த நிலையில் அவனை, பஞ்சாப் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
குறித்த சிறுவன், இந்தியா குறித்து தகவல்களை பாகிஸ்தானுக்கு பரிமாறியுள்ளதாக உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை, பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தச் சிறுவனிடம் இருந்த மொபைல்போனை பறித்து போலீசார் அதனை ஆய்வு செய்த நிலையில்,அதில் இந்தியா குறித்த முக்கியமான தகவல்கள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தான் ராணுவத்திடம் பரிமாறிக் கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு அளித்துள்ளதுடன், போதை மருந்து கடத்தல்காரனுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதன்கோட் எஸ்எஸ்பி தில்ஜிந்தர் சிங் தில்லான் கூறியதாவது: இந்த சிறுவன், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்பில் இருந்துள்ளதாகவும், தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிகுந்த இவன், முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், இவன் பிடிபடாமல் இருந்திருந்தால், பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பான் எனக்கூறியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் வலையில் இன்னும் சில சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Punjab police have arrested a 15 years old Kashmiri boy for spying for Pakistan