பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு – “அனைவரும் ஒன்றிணைந்து உதவுங்கள்” : கெஜ்ரிவால் வேண்டுகோள்!
Punjab flood damage Everyone come together and help Kejriwal appeals
நியூடெல்லி: கனமழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி, மக்கள் வாழ்க்கை சீர்குலைந்த நிலையில், பஞ்சாப் மக்களுக்கு நாடு முழுவதும் உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கெஜ்ரிவால்,“இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல. கடந்த 37 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் வீடிழந்துள்ளனர். அவர்களின் வாழ்நாள் சேமிப்புகள், கனவுகள் அனைத்தும் வெள்ளநீரில் கரைந்துவிட்டன” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும்,“நாட்டில் எப்போது எந்தவொரு பேரிடர் வந்தாலும், பஞ்சாப் மக்கள் எப்போதும் முன்னிலையில் இருந்து உதவியுள்ளனர். ஆனால் இன்று பஞ்சாப் தான் பேரழிவில் சிக்கியுள்ளது. இந்த கடினமான நேரத்தில், அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள், குறிப்பாக மத்திய அரசு பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். நாட்டு மக்களும் எவராலும் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் அறிவித்தார்.
“இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கெஜ்ரிவால் தனது வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Punjab flood damage Everyone come together and help Kejriwal appeals