யுபிஎஸ்சி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி: ஐஏஎஸ் அதிகாரியிடம் போலீஸ் விசாரணை..!
Police questioning IAS officer for passing UPSC exam by giving a fake certificate
மஹாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர். இவர் யுபிஎஸ்சி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டில் ஐஏஎஸ் பதவி பறிக்கப்பட்ட பூஜா கேத்கரிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இவர் சலுகைகளை பெற உடல் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவர் யுபிஎஸ்சி விதிமுறைகளுக்கு மாறாக, அடையாளத்தை மறைத்து அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி, தேர்வு எழுதியதாகவும் அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின. இதனையடுத்து அவரது பயிற்சி ரத்து செய்யப்பட்ததால், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி. நோட்டீஸ் அனுப்பியது.
அதனை தொடர்ந்து, கடந்த 25-ஆம் தேதி விளக்கம் அளித்த பூஜா கேத்கர், ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரினார். இதனை யுபிஎஸ்சி நிராகரித்த நிலையில், அவரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்ததுடன், யுபிஎஸ்சி தேர்விலும் பங்கேற்க தடை விதித்தது.

இது தொடர்பில் பூஜா கேத்கர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், விசாரணையை இழுத்தடிப்பது ஏன்? விரைவாக முடிக்கும்படி டில்லி போலீசுக்கு உத்தரவிட்டும் இருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக பூஜா கேத்கரும் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ,டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்காக பூஜா கேத்கர் ஆஜரானார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ''நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணைக்கு ஆஜராக இங்கு வந்தேன். அனைத்து வழிகளிலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஆரம்பம் முதலே கூறியுள்ளேன். போலி சான்றிதழ் வழங்கியதாக என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். இந்தியாவில்தான் இருக்கிறேன். இங்கு தான் இருப்பேன். வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுவது அனைத்தும் பொய்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
Police questioning IAS officer for passing UPSC exam by giving a fake certificate