போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் - அங்கன்வாடி ஊழியருக்கு அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை.!
minister geetha jeevan say action against protest angawadi employees
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பு, நேற்று முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் சில இடங்களில் குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மே 2 – ம் தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது அரசு சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக, வரும் மே.11 முதல், 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். உணவு பாதுகாப்பு சட்டப்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும்.
ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு கடந்த 2022- ம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.
பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது.
ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister geetha jeevan say action against protest angawadi employees