'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை சமணர் தூணாக மாற்ற அரசு முயற்சிக்கிறது'; உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் குற்றச்சாட்டு..!
The petitioners allege that the government is attempting to convert the lamp post located on the summit of Thiruparankundram hill into a Jain pillar
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான, வழக்கின் மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் 4-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் மனுதாரர்களான ராம ரவிகுமார், அரசபாண்டி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிட்டார். அப்போது அவர், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற பொது அமைதி சீர்கேடும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் கூறுவது நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதை தாமதிப்பதற்கான காரணமாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன், பொது அமைதி சீர்கெடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இது சாக்குப்போக்கு காரணம் என்று குறிப்பிட்டதோடு, பொது அமைதி என்பது ஒட்டுமொத்த மாநிலம் சார்ந்தது. சட்ட அமைப்பான நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் அரசு அடிப்படை கடமையை மீறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பு 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. காவலர்கள் குவிக்கப்பட்டனர். அடிப்படை உரிமை அனைவருக்கும் பொதுவானது. இரு மதத்தினர் இடையே பிரச்சினை வரும் என்பதற்காக அடிப்படை உரிமையை நிறைவேற்ற அரசு தயக்கம் காட்டக் கூடாது என்றும் தெரிவிதித்துள்ளார்.
அத்துடன், மத விவகாரங்களில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும், சபரிமலை வழக்கில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, மேல்முறையீட்டு மனுதாரர்கள் வாதங்களை மட்டும்தான் வைக்கின்றனர். ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் கோயிலுக்கு சொந்தமான எந்தப் பகுதியிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இருப்பினும் வேண்டும் என்றே திட்டமிட்டு இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை உள்ளது போல் மேல்முறையீட்டு மனுதாரர்கள் வாதிட்டு நீதிமன்றத்தை திசை திருப்பி வருகின்றனர் என்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிட்டார்.

மேலும், பாரம்பரியமான இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தற்போது ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றக் கூடாது என மனுதாரர்கள் கூறியுள்ளனர். வழக்கின் தீர்ப்பில் தனி நீதிபதி தனது சித்தாந்தத்தை குறிப்பிட்டுள்ளார் என மேல்முறையீட்டு மனுதாரர்கள் கூறுவது ஏற்படையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தீபம் ஏற்றுவதற்கு முழு அதிகாரம் கோயிலுக்கு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என நீதிபதி கனகராஜ் தனது உத்தரவில் கூறியுள்ளார். கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறும்போது மனுதாரரின் மனு நிலைக்கதக்கதா என்ற கேள்வி எழுகிறது என்பதால், அது குறித்து வாதங்களை முன்வையுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் கூறுகையில், 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டதும் நீதிமன்றத்தை நாடினோம்.

1996-ஆம் ஆண்டு உத்தரவின்படி, தர்காவில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த உத்தரவில் எந்த குழப்பமும் இல்லை. அத்துடன், திருப்பரங்குன்றத்தில் இரண்டு மலைகள் கிடையாது. இரண்டு மலை உச்சிகள் தான் உள்ளன என்றும் தெரிவித்தனர். மேலும், மலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் என முடிவான பிறகு அந்த இடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என தர்கா தரப்பினர் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தர்கா தரப்பினர் மலை முழுவதும் சிக்கந்தர் மலை என உரிமை கோரி வருகின்றனர். மலையில் ஆடு, கோழி பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். தற்போது நெல்லித்தோப்பில் உள்ள படிக்கட்டுகள் வழியாக தீபம் ஏற்ற செல்வதற்கு விடமாட்டோம் என வாதிடுகின்றனர். கோயிலின் கீழிலிருந்து தான் படிக்கட்டுகள் மேலே செல்கிறது. அந்த வழியாக யாரையும் மலைக்கு மேல் அனுமதிக்கமாட்டோம் என நாங்கள் சொல்ல முடியுமா? என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
English Summary
The petitioners allege that the government is attempting to convert the lamp post located on the summit of Thiruparankundram hill into a Jain pillar