போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு!
Order to inspect Boeing category aircraft
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் ,இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர்தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பயணிகளில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டவர்கள், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் 1 கனடா நாட்டவர் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில் ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.போயிங் 787 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் விமானத்தின் பாதுகாப்பு ,எரிபொருள் இருப்பு நிலவரம், இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
English Summary
Order to inspect Boeing category aircraft