05 ஆயிரம் ரூபாய்க்காக கடற்படை ரகசியங்களை பாகிஸ்தான் பெண்ணிடம் கசியவிட்ட நபர்கள்; NIA தீவிர விசாரணை..!
NIA is investigating the individuals who leaked Navy secrets to a Pakistani woman
பாகிஸ்தான் இளம்பெண்ணிடம் இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளனர் என 02 பேரை கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் கார்வார் நகரில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். கதம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 02 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரிடம் 2023-ஆம் ஆண்டு பேஸ்புக் மூலமாக பாகிஸ்தான் பெண் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அத்துடன் அவர் அந்நாட்டின் கடற்படை அதிகாரியாகவும் தன்னை காட்டிக்கொண்டு பேசியுள்ளார்.
அவர்களிடம் நட்பை பலப்படுத்திய பின்னர், அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.05 ஆயிரம் வீதம் 08 மாதங்களாக பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக, போர்க்கப்பல்களின் இயக்கம் உள்பட இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் கப்பல் கட்டுமான பணி திட்டங்கள் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார்.

இவர்களும் அந்த பெண்ணிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு, ரகசிய விவரங்களை கசிய விட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த அதிகாரிகள் குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அக்சய் நாயக் மற்றும் வேதன் தண்டேல் ஆகிய 02 பேர் நேற்று கைது செய்யப்பட்டு, அவர்கள் 02 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர், இருவரையும் மாவட்ட கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். தற்போது குறித்த 02 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கடற்படை தளத்தில், இந்தியாவின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்தியா மற்றும் ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகிய விமானந்தாங்கி கப்பல்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் பெரிய அளவிலான ரகசிய தகவல்களை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விவகாரம் இருக்க கூடும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் தீபக் என்பவர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் இருவரை பற்றிய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது என காவல் கண்காணிப்பாளர் நாராயண் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறதாக கூறப்படுகிறது.
English Summary
NIA is investigating the individuals who leaked Navy secrets to a Pakistani woman