டயர் வெடித்து நிலை தடுமாறிய லாரி.! பேருந்துகள் மீது மோதியதில் 14 பேர் உயிரிழப்பு.!
near madhya pradesh fourteen peoples died for accident
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக சாலையோரம் மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த சிமெண்ட் லாரி ஒன்றின் டயர் வெடித்து, நிலை தடுமாறி சாலையோரம் பேருந்துகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பதினான்கு பேர் உயிரிழந்த நிலையில், அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ராஜேஷ் ரஜோரா தெரிவித்துள்ளதாவது, "இந்த விபத்தில், இதுவரைக்கும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்துள்ளார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் ரேவாவிற்கு வெளியே விமானத்தின் மூலம் அனுப்பப்படுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி, அரசு வேலை வழங்கப்படும். இதில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
near madhya pradesh fourteen peoples died for accident