மேற்கு வங்கத்தில் 'ஐ-பேக்' நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுப்பு; ஆவேசமான மம்தா பானர்ஜி..!
Mamata Banerjee Enraged After IPAC Employees in West Bengal Were Sent on 20 Days Leave
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் மம்தாவுக்காக வேலை பார்த்த ஐ-பேக் மேற்கு வங்கத்தில் உள்ள ஊழியர்கள் 20 நாட்கள் விடுப்பில் செல்ல வேண்டும் என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி 08-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த நிறுவனத்தின் இயக்குநரான வினேஷ் சந்தேல் சமீபத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஐ-பேக் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அதில், சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள ஊழியர்கள் 20 நாட்கள் விடுப்பில் செல்ல வேண்டும் என்றும், மே 11-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் நிர்வாகம் உங்களை தொடர்பு கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஊழியர் ஒருவர் கூறுகையில், 'இந்த விடுமுறை காலத்தில் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுமா அல்லது வேலை பறிபோகுமா என்று தெரியவில்லை.
ஏற்கனவே, கொரோனா காலத்தில் இதுபோன்று 20 நாட்கள் விடுப்பு என்று கூறி 06 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தோம். பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நெருக்கடிகளை கொடுக்கிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஐ-பேக் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய பொய் செய்திகள் பரப்பப்படுவதாக கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது; ஐ-பேக் நிறுவனத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், 'தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகளை ஏவி எங்களை ஏன் அச்சுறுத்துகிறீர்கள்? எங்களுக்காக பணியாற்றும் ஒரே நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. அந்த நிறுவன ஊழியர்களின் வேலை பறிபோகாது, அவர்களுக்கு நானே வேலை கொடுப்பேன்' என்று கடுமையாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mamata Banerjee Enraged After IPAC Employees in West Bengal Were Sent on 20 Days Leave