பிரதீக் ஜெயின் இல்லம், அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை; 'தேர்தல் ரகசியங்களை அபகரிக்க அமித்ஷாவின் முயற்சி'; மம்தா குற்றச்சாட்டு..!
Mamata alleges that the Enforcement Directorate raid was Amit Shah's attempt to seize election secrets
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன, இவர் மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக பரவலாக அறியப்பட்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால, இந்த திடீர் சோதனை தொடர்பான செய்திகள் வெளி வந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் 'சால்ட் லேக்' அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கினர்.

அத்துடன், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், தன் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாகவும், இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்றும், சோதனையின் போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை என்றும், ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா..? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் மம்தா விமர்சித்துள்ளார். "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
English Summary
Mamata alleges that the Enforcement Directorate raid was Amit Shah's attempt to seize election secrets