தேர்தல் களத்தில் விஜய் அதிரடி! - தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு..!
Vijay makes bold move electoral arena Tamilaga Vetri Kazhagam announces election manifesto committee
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம், அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் முறைக்கு மாறியுள்ளன.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை வேகப்படுத்தும் வகையில், அதன் தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றமும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் நமது முதன்மை இலக்கு. அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றிக் கழகம் தயாரிக்க உள்ளது.
இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.இந்த குழு,பொதுமக்கள்,சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கங்கள், விவசாயிகள், வர்த்தக சபைகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், தேவைகள் மற்றும் தரவுகளை நேரடியாக சேகரித்து, அவற்றின் அடிப்படையில் மக்கள் மையமான, வளர்ச்சியை நோக்கிய தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உள்ளது.
அருண் ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை குழுவில், பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணிபாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, சத்யகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இந்த குழுவினர் தமிழகமெங்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும் போது, கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தேவையான உதவிகளை செய்யுமாறும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம், மக்களின் குரலை நேரடியாகக் கேட்டு அரசியல் தீர்வுகளை உருவாக்கும் முயற்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay makes bold move electoral arena Tamilaga Vetri Kazhagam announces election manifesto committee