வைடு பந்தில் அவுட்டா...? - மனைவியுடன் கிரிக்கெட் விதிகளில் ‘காமெடி கிளாஸ்’ எடுத்த தோனி...!
Out on wide ball Dhoni gives his wife comedy class cricket rules
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் அவர், சமீபத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ஒரு நகைச்சுவையான குடும்ப அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இதுகுறித்து தோனி தெரிவித்ததாவது,"2015-ம் ஆண்டு நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, குடும்பத்துடன் செலவிட எனக்கு கூடுதல் நேரம் கிடைத்தது.

பொதுவாக நானும் என் மனைவியும் கிரிக்கெட் விஷயங்களை அதிகம் விவாதிப்பதில்லை.ஆனால் ஒரு நாள், நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது பந்துவீச்சாளர் ஒரு வைடு பந்து வீசினார்.
அந்த சமயத்தில் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வந்தபோது, விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார்.அதை பார்த்தவுடன் என் மனைவி, ‘இது அவுட் கிடையாது. வைடு பந்தில் ஸ்டம்பிங் செய்ய முடியாது’ என்று உறுதியாகச் சொன்னார்.
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த பேட்ஸ்மேன் அவுட் என அறிவிக்கப்பட்டு, பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார். ‘அவரை மீண்டும் அழைப்பார்கள்’ என்று என் மனைவி நம்பிக்கையுடன் சொன்னார்.
அதற்கு நான், ‘நோ-பால் பந்தில் மட்டும்தான் ஸ்டம்பிங் செய்தால் அவுட் கிடையாது. வைடு பந்தில் ஸ்டம்பிங் செய்தால் அவுட் உண்டு’ என்று விளக்கியேன்.அதைக் கேட்டவுடன் அவள் சிரித்தபடி, ‘உங்களுக்கு ஒன்றுமே தெரியாது… பாருங்கள், நடுவர்கள் அவரை திரும்ப அழைப்பார்கள்’ என்று சொன்னார்” என்று தோனி சிரிப்புடன் நினைவுகூர்ந்தார்.
கிரிக்கெட் விதிகளிலும் கூட கணவன்–மனைவி இடையே நடந்த இந்த சின்ன நகைச்சுவை, ரசிகர்களிடையே பெரும் ரசிப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Out on wide ball Dhoni gives his wife comedy class cricket rules