மீண்டும் துயரம்: வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை!
Karntaka bangalore dowry case
கர்நாடகத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக 28 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகலகுண்டேவில் வசித்த பூஜாஸ்ரீ, வங்கியில் காசாளராக பணிபுரிந்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவன ஊழியர் நந்தீஷ் (32) என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. ஆனால், ஆகஸ்ட் 30 அன்று பூஜாஸ்ரீ தனது இல்லத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
உயிரிழந்தவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினர். முதற்கட்ட தகவலின்படி, கணவர் நந்தீஷ் மற்றும் மாமியார் சாந்தம்மா தொடர்ந்து வரதட்சணை கோரி பூஜாஸ்ரீயை துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. மேலும், கணவர் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதை பற்றி கேள்வி எழுப்பியபோது, பூஜாஸ்ரீ மீது வன்முறை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைகள் காரணமாக தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளன. மனமுடைந்த பூஜாஸ்ரீ, கணவர் மற்றும் குழந்தை இல்லாத நேரத்தில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் நந்தீஷ், அவரது தாயார் சாந்தம்மா உட்பட நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நந்தீஷ் ஆகஸ்ட் 31 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த வாரம் பெங்களூரில் வேறொரு சம்பவத்திலும், ஐடி ஊழியராக இருந்த ஒருவர் பானிபூரி விற்பனைக்கு மாறிய நிலையில், கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் 27 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அதே மாதிரியான இன்னொரு சம்பவம் குறுகிய காலத்தில் நடைபெற்றிருப்பது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karntaka bangalore dowry case