Work From Home நடைமுறையை மீண்டும் பின்பற்றுங்கள்! காலத்தின் கட்டாயம்! பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்!
Follow the Work From Home policy again It the need of the hour What did Prime Minister Modi say Full details
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “சாத்தியமான இடங்களில் மீண்டும் Work From Home முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட மோடி, தேவையற்ற பயணங்களை குறைப்பது அவசியம் என்றார்.
“கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் போன்ற நடைமுறைகளுக்கு மக்கள் பழகிவிட்டனர். தற்போதைய சூழலிலும் அந்த முறைகளை மீண்டும் அதிகப்படியாக பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும், “வீட்டிலிருந்து வேலை செய்வதால் பயணச் செலவுகள் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும், அதேசமயம் மக்களின் பொருளாதார சுமையும் குறையும்” என தெரிவித்தார்.
டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி உற்பத்தித்திறனை பாதிக்காமல் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும், இது தேசிய நலனுக்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேபோல், அந்நியச் செலாவணியை சேமிப்பது அனைவரின் பொறுப்பு என கூறிய மோடி, “பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்காக செலவிடப்படும் வெளிநாட்டு நாணயத்தை குறைப்பதில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் பயன்பாட்டையும் குறைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை சற்று குறைத்தால்கூட அது தேச நலனுக்கான பெரிய பங்களிப்பாக இருக்கும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
English Summary
Follow the Work From Home policy again It the need of the hour What did Prime Minister Modi say Full details