இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-6' ஏவுகணை; வரலாறு படைக்க தயாராகும் டிஆர்டிஓ..!
DRDO prepares to make history with India's first intercontinental ballistic missile Agni 6
இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-6' ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது;
''அக்னி-6 - வல்லரசு பாதையை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. 10,000+ கிமீ தூரம் பாயும் திறன் மற்றும் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன், அக்னி-6 வரலாறு படைக்க தயாராக உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பை எதிரிகள் ஊடுருவ முடியாததாக மாற்றும். அத்துடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் நம்மை நிலைநிறுத்தும். வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா''என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பாஜ அரசு பதிவேற்றிய ஒரு காணொலியில் கூறியுள்ளதாவது;
''இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய 05 நாடுகள் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சக்தியை கொண்டுள்ளன. அதே வரிசையில் இந்தியா தனது நிலையை வலுப்படுத்த போகிறது.
அக்னி-6 இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏவுகணையாகும். நீண்ட தூரம் சென்று தாக்கும் திறனுடன், இந்தியாவின் வலிமை பிராந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியிலும் விரிவடைய போகிறது. இங்குதான் அடுத்த பெரிய மாற்றம் நிகழ்கிறது. ஒரு ஏவுகணை, பல இலக்குகள், அதுவே எம்ஐஆர்வி தொழில்நுட்பம். இது ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே இருந்த இந்த சக்தி, இப்போது இந்தியாவுக்கும் கிடைத்துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
DRDO prepares to make history with India's first intercontinental ballistic missile Agni 6